தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Drinking Water: சென்னையின் 3 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்! - கடல் நீரை குடிநீராக்கும் ஆலை

நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் 8, 9 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோழிங்கநல்லூர், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

drinking water
சோழிங்கநல்லூர்

By

Published : Jun 6, 2023, 6:41 PM IST

சென்னை:சென்னையில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் குடிநீர், சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரிகள் வழியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்:கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த தண்ணீர் திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 1,516 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், கடல்நீரை உட்கொள்ளும் குழாய், உவர் நீரை வெளியேற்றும் குழாய் ஆகியவை கடலில் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், குடிநீர் விநியோகத்திற்காகவும் 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் வரும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடிநீர் நிறுத்தம்:நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் 8ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சோழிங்கநல்லூர், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, பாலவாக்கம் வெட்டுவாங்கண்ணி, கொட்டிவாக்கம், பெருங்குடி, புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வரும் 8ஆம் தேதி காலை பத்து மணி முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை இப்பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.10க்கு மஞ்சப்பை.. தானியங்கி இயந்திரம் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details