இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு பல்கலைக்கழகங்களில் உயிரிதொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
1. பாரதியார் பல்கலைக்கழகம்
2. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
3. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
4. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.
இந்நாள் வரை எல்லா பட்டப்படிப்புகளுக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அரசு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் உயிரி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு (M.Sc. Bio Technology) மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது (UNESCO-Central).
பல்கலைக்கழக மானியக் குழு தெளிவாக அதன் அறிக்கையில் மாநில அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்று கூறினாலும், தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மாறாக மத்திய அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டை ஏற்று 49.5 விழுக்காட்டைப் பின்பற்றுவது கண்டனத்துக்கு உரியது. அரசனை விஞ்சிய விசுவாசியா அதிமுக அரசு?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொருளாதாரத்தில் நலிந்த மேல் சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தது அதிமுக அரசு. அதற்கு மாறாக இந்தத் தொகுப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடை உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தோர் (EWS) என்போருக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதுபற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது சமூகநீதிக்கும், நடைமுறையில் உள்ள அரசின் கொள்கைக்கும், நடப்புக்கும் நேர் எதிரான, சட்டவிரோதமான சமூக அநீதியும், துரோகமும் ஆகும்.
தமிழ்நாடு அரசு சட்டவிரோத, சமூகநீதிவிரோத ஆணையை ரத்து செய்து, தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சரியாக முழுமையாகப் பின்பற்றுவதோடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் மிகப் பெரிய போராட்டத்தை மாநில அரசு எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஏன் ஜெயலலிதாவிற்குக் கூட செய்யும் துரோகத்தை தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி - திராவிட மண் ஒருபோதும் ஏற்காது. இதனை உடனே தடுத்து நிறுத்தி, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அந்தப் பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தாவிட்டால் அதற்குரிய கடும் விலையை தமிழ்நாடு ஆளும் கட்சியும், மத்திய அரசில் இடம் பெற்ற கட்சியும் கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவூட்டுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்