சென்னை: சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகள் போன்றவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பிரச்னையை சரி செய்திட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கல் உள்ளிட்டப் பரிந்துரைகளை நீதியரசர் முருகேசன் குழு வழங்கிடும் என நம்பலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீட்டை வழங்கிட டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் குழு பரிந்துரை செய்திருந்து, 2007 முதல் அது நடைமுறைக்கு வந்திருந்தால், ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவம், பொறியியல் உட்பட பல்வேறு தொழிற் கல்லூரிகளில் படித்திருப்பார்கள். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தையும் தடுத்திருக்கலாம்.
தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாணாக்கர்கள் பெருமளவில் மாறியதையும் தடுத்திருக்கலாம். டாக்டர். அனந்தக்கிருஷ்ணன் குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரைக்காமல் தவறு செய்துவிட்டது. எங்களது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , 2005 முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிவந்தது. அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாத குறைபாட்டை சரி செய்வதற்கான காலம் இப்பொழுது கனிந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 %இட ஒதுக்கீடு
நீதியரசர் முருகேசன் குழு அமைக்கப்பட்டதின் மூலம் உறுதியாவது என்ன வென்றால், வெறும் நுழைவுத் தேர்வு ரத்து மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அல்லது அடித்தட்டு மாணவர்களுக்கு பெரும் பயன் அளித்துவிட வில்லை என்பதுதான். நீட் தேர்வோ பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவாகப் பெற்ற மருத்துவ இடங்கள் அதை உறுதி செய்கிறது.
போட்டித் தேர்வு இல்லாமல் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்த பொழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படவே செய்தனர் என்பதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் உறுதி செய்கிறது.
கடந்த 2006 முதல் 2016 வரை , அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட 29,925 எம்பிபிஎஸ் இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் 213 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப் பெரும் அளவில் உதவியுள்ளது. இப்பொழுது இதை எதிர்த்தும் ஒரு கூட்டம் வழக்குத் தொடர்கிறது. ஒரு புறம் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை சரி செய்ய உரிய பரிந்துரைகளை வழங்கிட ஓர் குழு. மறுபுறம் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையிலும், தொழிற் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு, அதை சரி செய்ய உரிய பரிந்துரைகளை வழங்கிடக் மற்றொரு குழு.
இரண்டும் வரவேற்கப்பட வேண்டியதே; இருந்த போதிலும், மாணவர் சேர்க்கை நடைமுறைகளையும் தாண்டி, தொழிற் கல்லூரிகளில், உயர் கல்வி நிறுவனங்களில், ஏழை எளிய மாணவர்கள் சேர்வதற்கு பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணிகள் தடைகளாக உள்ளன என்பதையே இது உணர்த்துகிறது.
முதலாளித்துவம் உருவாக்கியுள்ள தடைகள்
இப்பிரச்சனைகளுக்கு சரியானத் தீர்வுகளை கண்டறிய வேண்டும். தொழிற் கல்லூரி வாய்ப்புகள் கிடைக்காதற்கு, மாணவர் சேர்க்கை முறைகள் மட்டும் தான் காரணம் என எண்ணி அவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவது சரியல்ல. எந்த முறையில் மாணவர் சேர்க்கையை அமைத்தாலும், ஒரு பணக்கார மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஒரு ஏழை மாணவனுக்கு கிடைக்கவில்லை ( அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு ஓரளவு நிவாரணம் அளித்துள்ளது). அதற்குக் காரணம், இன்றைய முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்பு, கல்வி பெறுவதில் ஏழைகளுக்கு எதிராக உருவாக்கி இருக்கும் பல்வேறு வகையான தடைகள் என்பதை அறிய வேண்டும்.
குறிப்பாக உயர்கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பது. கல்வி தனியார் மயமாக்கப்பட்டு, மிக வேகமாக கார்ப்பரேட் மயமாவது. கட்டணக் கொள்ளை அதிகரிப்பது. அடித்தட்டு மக்களின் வறுமை அதிகரிப்பது போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். இவை அனைத்தும் முதலாளித்துவம் உருவாக்கியத் தடைகள். இத் தடைகளை உருவாக்கியுள்ள முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்ட முனையாமல், முதலாளித்துவம் உருவாக்கியுள்ள மாணவர் சேர்க்கை நடை முறைகளை மட்டுமே மாற்றிவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும் எனப் போராடுவது, நம்மையும், நவீன லுட்டைடுகளாக வரலாறு முத்திரை குத்தி விடும்' எனக் கூறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது!