நீட் தேர்விற்குப் பிறகு ,தமிழ் வழியில் படித்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விழுக்காடு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனவே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையோடு, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 20 விழுக்காடு வரை தனி ஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரியில் வழங்கட வேண்டும் என்ற கோரிக்கையை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
அறிக்கை அளிக்க குழு அமைப்பு
நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த கருத்துக்களை பல்வேறு தரப்பினரிடம் பெற்றது.
நீட் தேர்வு குறித்து 86,342 கருத்துக்களை அனுப்பி இருந்தனர். இமெயில் மூலம் 85953 பேரும், தபால் மூலமாக 332 பேரும், நேரடியாக 57 பேரும் குழுவிற்கு கருத்துக்களை அனுப்பி இருந்தனர். அதில் நீட் தேர்வு தேவையில்லை என 65007 பேரும், ஆதரவாக 18966 பேரும்,1453 பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
அறிக்கை தகவல்கள் வெளியீடு
மேலும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்.
அந்த அறிக்கையில் உள்ள தகவல்களை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
கோரிக்கை
இந்நிலையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், "இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். தனியார் பள்ளிகளிலும்,தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கை தமிழ்நாடு அரசு முயற்சித்தால், இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த முடியும். ஏற்கனவே, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க 2010 ல் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.நீட்டிலிருந்து விலக்குப் பெற்றாலும் கூட , தமிழ் வழிக் கல்வியை பாதுகாக்க ,தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கான தனி ஒதுக்கீடு உதவும். ஒரு வேளை நீட்டிலிருந்து விலக்கு பெற காலதாமதமானால் , இந்த தமிழ்வழி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் ஓர் இடைக்காலத் தீர்வாக ,ஏழை எளிய குடும்ப மாணவர்களுக்கு பயனளிக்கும். ஏனெனில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே.
தேவையான நடவடிக்கை
ஏழை எளிய உழைக்கும் மக்களின் குழந்தைகள் தான் ,தமிழ் வழிக் கல்வி மறைந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்
கிறார்கள். எனவே ,நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கு முயலும் அதே வேளையில், தமிழக அரசால் செய்து முடிக்கக் கூடிய ,தமிழ் வழி மாணவர்
களுக்கான தனி் இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்." என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நீட் விவகாரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தலைகீழ் மாற்றம்