சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் (The Tamil Nadu Dr. M.G.R.Medical University) பத்தாவது துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யன் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு, எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த நாராயணசாமி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக அண்மையில் நியமிக்கப்பட்டார். கடந்த 29ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நியமன ஆணையை மருத்துவர் நாராயணசாமியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மருத்துவர் நாராயணசாமி இன்று (ஜூன் 1) பதவியேற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் கலையரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மருத்துவர் நாராயணசாமி துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: Anna University: பிஇ, பிடெக் படிப்பு 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பதிவாளர் அஸ்வத் நாராயணன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் சாந்தாராம், மேஜர் ராஜா, பிரம்மானந்தம், சட்டமன்ற உறுப்பினர்களான எழிலன், கே.கணபதி மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.