தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுப்பராயன் எம்.பி. ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? மருத்துவ சங்கத்தை கண்டித்த மருத்துவர் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தனியார் மருத்துவமனைகள் குறித்து திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ள நிலையில், இதற்கு டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்

By

Published : May 31, 2021, 9:25 PM IST

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், சில தினங்களுக்கு முன்பு ஒரு டீவிட் செய்திருந்தார். அதில், 'பணம் தின்னி கழுகுகளான தனியார் மருத்துவமனைகளை, தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், நோய்த் தொற்றின் தீவிர சவாலை வெற்றிகரமாக முறியடித்து, மக்களை காப்பாற்ற முடியும்!' எனப் பதிவிட்டிருந்தார்.

தனியார் மருத்துவமனைகள் குறித்து கருத்து கூறியது குற்றமா?

இந்தப் பதிவை கண்டித்தும், சுப்பராயன் எம்.பி. இந்த பதிவை திரும்பப் பெற வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கம் மே 28ஆம் தேதி அன்று பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஎம்ஏ-வின் இந்த அறிக்கை அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை, அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தேசவிரோத குற்றமா?. அதுவும் பெருந்தொற்று காலத்தில், தொற்றின் தீவிர சவாலைக் கட்டுக்குள் கொண்டு வர இது போன்ற ஆலோசனை கூறியது பெருங்குற்றமா?.

கட்டணக் கொள்ளை நடைபெறுவது அம்பலம்:

கரோனாவை பயன்படுத்தி நாடு முழுவதுமே பல தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. கட்டணக் கொள்ளை நடைபெறுவதை பல நீதிமன்றங்களும் அம்பலப்படுத்தியுள்ளன. நீதிமன்றங்களின் தலையீட்டின் காரணமாக பல மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளை தங்களது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடைபெறாவிட்டால், அரசு ஏன் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்? என வேண்டுகோள் விட வேண்டும்?

ஐஎம்ஏ கருத்து கூறியது உண்டா?

கராேனா பாதிப்பிற்கு உள்ளான மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் கடன்காரர்களாக மாறிவிட்ட துயரமான நிகழ்வுகள் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைமைக்கு தெரியாதா? அவர்களின் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராடியது உண்டா? இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு:

அதிக கட்டணம் வசூலித்த காரணத்திற்காக சில மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல மருத்துவமனைகள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. இதை இந்திய மருத்துவச் சங்கம் கண்டித்தது உண்டா?.

எனவே இத்தகைய சூழலில், பொதுமக்கள் நலன் கருதி, கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என சுப்பராயன் எம்.பி. கூறியதில் என்ன தவறு உள்ளது. இந்நிலையில், அவர் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

'பிணம் தின்னி கழுகு' என்று எம்.பி. கூறவில்லை:

அவர் 'பணம் தின்னி கழுகு' என்று தான் குறிப்பிட்டுள்ளார். அதை ஐஎம்ஏ 'பிணம் தின்னி கழுகு' என சுப்பராயன் எம்.பி. கூறியதாக திரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளின் முதலாளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கட்டணக் கொள்ளைக்கு ஐஎம்ஏ தலைமை துணை போகக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிப்பவர்களுக்கு அரசுகள் உதவ வேண்டும்!' - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details