தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.சண்முகத்திற்கு 'அம்பேத்கர் விருது', சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது' - தமிழக அரசு அறிவிப்பு - அம்பேத்கர் விருது பெற தகுதிகள்

TN CM Award: 2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ சுப.வீரபண்டியனுக்கும் மற்றும் “டாக்டர் அம்பேத்கர் விருது” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சண்முகம் ஆகியோருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.13) வழங்குகிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:19 PM IST

சென்னை: 2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ மற்றும் “டாக்டர் அம்பேத்கர் விருது” - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜன.13) வழங்க உள்ளார்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்பு செய்யும் வகையில், சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது”-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது’’ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 லட்சம் பரிசுத் தொகை: விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக செயலாற்றி வருகிறார். இவர் 'ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.

தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற இவர், கல்லூரியில் பணியாற்றும்போதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி செயல்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 'கலைமாமணி விருது' பெற்ற சுப. வீரபாண்டியன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார். மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்.

இவர் 'வாச்சாத்தி - உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் – வழக்கு - தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில் வனமக்கள் வாழ்க்கை வளம்பெற, வனங்களை பாதுகாப்பது மக்களே' போன்ற செய்தி தொகுப்புகளையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருநெல்வேலி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details