சென்னை:உலக பார்வை தினம் 2023 அனுசரிப்பின் ஒரு பகுதியாக, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனம், கண் பராமரிப்பு மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனமான இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் (IVI) உடன் இணைந்து, தனித்துவமான ஒரு நிகழ்வை இன்று (அக்.08) அரங்கேற்றியது.
சென்னை எலியட்ஸ் கடற்கரையில், கண் கண்ணாடி உருவத்தை மனிதர்களின் பங்கேற்புடன் நேர்த்தியான வகையில் மனிதர்களை கொண்டு உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
மேலும், வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள், கண் மருத்துவர்கள், மாணவர்கள், பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இம்முயற்சியில் தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த நிகழ்வில், சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சமாய் சிங் மீனா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சென்னை மாநகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடிமக்கள், தங்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு பங்கேற்ற நடைப்பயிற்சியும், இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்றது. குருட்டுத்தன்மை வராமல் தடுப்பதற்கான சர்வதேச முகமையின் (International Agency for the Prevention of Blindness-IAPB) ஆதரவோடு நடத்தப்படும் உலக பார்வைத்திறன் தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.
பணியமைவிடங்களில் கண்களது பார்வைத்திறன் ஆரோக்கியத்தை கவனமுடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘பணியில் உங்களது கண்களை நேசியுங்கள்’ என்ற கருத்தாக்கம் இந்தாண்டு உலக பார்வைத்திறன் தின அனுசரிப்பின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் கற்பகம் பேசும்போது, “பார்வைத்திறன் குறைபாடு அல்லது பார்வையின்மையோடு உலகெங்கிலும் 2.2 பில்லியன் நபர்கள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிகிறது. இத்தகைய நிலைக்கு கண்புரை நோய் மற்றும் சரிசெய்யப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகள் என்பவையே இரு முக்கிய காரணங்களாக, முறையே 40 சதவீதம் மற்றும் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை கொண்டிருக்கின்றன.