சென்னை:மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் என்னும் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (மார்ச் 28) வழங்கியது.
இதற்கான கூட்டம் இன்று (மார்ச் 29) சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) த. அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது திட்ட இயக்குநர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தினார்.