கரோனா தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, ஒன்பது முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தயார்நிலையில் புத்தாக்க பயிற்சி கட்டகம்
இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் ஒன்பது, 10ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், ஆகிய பாடங்களுக்கும், தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.