ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. தமிழக ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை! - தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி

Teachers Protest: டிபிஐ வளாகம் ஆசிரியர் சங்கங்களின் இதய குமுறல்களை வெளிப்படுத்தும் சிவந்த மண்ணாக மாறிக்கொண்டிருப்பதை காண முடிவதாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆசிரியர் சங்கங்களின் போராட்டக் களமாக மாறிய டிபிஐ வளாகம்
ஆசிரியர் சங்கங்களின் போராட்டக் களமாக மாறிய டிபிஐ வளாகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 6:45 PM IST

சென்னை:தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை வெளியிட்டுள்ள குறிப்பில், “டிபிஐ வளாகம் ஆசிரியர் சங்கங்களின் இதய குமுறல்களை வெளிப்படுத்தும் சிவந்த மண்ணாக மாறிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 27-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 10 ஆயிரத்து 205 பேருக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி உள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் நம்பிக்கையூட்டியுள்ளார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வந்தனர். முதலமைச்சராக கருணாநிதி ஆட்சி மீண்டும் ஏற்பட்ட பிறகு, வேலை நியமன தடைச் சட்டத்தினை நீக்கிவிட்டு, புதிய நியமனங்களை செய்தார் என்பது அனைவரின் நெஞ்சிலும் பதிவாகியுள்ளது என்பதை மறுக்கத்தான் முடியுமா? மறக்கத்தான் முடியுமா?

பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். என்னுடைய இன்னொரு முகமாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உங்களை நாடி வருபவர்களை அமர வைத்து அன்பாக பேசுங்கள். அவர்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேளுங்கள் என்று முதலமைச்சர் கூறியது, அனைவருடைய இதயங்களையும் தொடும் வார்த்தைகளாகும்.

டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் நான்கு ஆசிரியர் சங்கங்களும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுங்கள் என்றுதான் நினைவுபடுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நமக்கு ஏதாவது நன்மை செய்வார்கள் என்றுதான் விடாமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பலர் எதிர்கட்சியாக இருந்தபோது, எங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நியமனத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, முன்னுரிமை விதியினை வகுத்து எங்களை காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்றுதான் கேட்டு வருகிறார்கள். இது ஒன்றும் செய்ய முடியாத கோரிக்கை இல்லை.

12 ஆண்டு காலமாக ஆசிரியர் நியமனம் இல்லாமல், பல பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளது என்பது அரசுக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். அழைத்துப் பேசினார், குழுவினை அமைத்தார். ஏதாவது ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு முன் வர வேண்டாமா? அவர்கள் போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி ‘எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்’ என்றுதான் போராடி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற 55 ஆயிரத்து 200 பேரையும் 1.6.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கி, ஆணை வழங்கிய வரலாறு தமிழ்நாட்டில் மட்டுமன்றி வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெற்றது இல்லை. முதலமைச்சர் கருணாநிதி, 55 ஆயிரத்து 200 பேருக்கும் ஒரே சமயத்தில் பணி நிரந்தரப்படுத்தி ஆணை வழங்கினார்.

இவர்கள் 12 ஆயிரம் பேர்தான் பணிபுரிந்து வருகின்றனர். அந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு கூட இவர்கள் இல்லை. மனம் இருந்தால் இவர்களுக்கு வாழ்வளிக்கலாம். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் ஒரு இயக்கம் மாநிலம் முழுவதும் பெண்ணாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை பெரும் எண்ணிக்கையில் திரட்டி கோட்டையை நோக்கி பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தியுள்ளனர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பாக அக்டோபர் 13-ஆம் தேதி டிபிஐ அலுவலக வளாகம் முன்பு மாபெரும் கோரிக்கை முழக்க எழுச்சி ஆர்ப்பாட்டத்தினை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையினை புள்ளிக்கல்வித் துறையாக மாற்றி விட்டனர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கொண்டு வரப்பட்ட Bridge course திட்டமான எண்ணும், எழுத்தும் திட்டத்தினை விளம்பரத் திட்டமாக மாற்றி, மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தி வருகின்றனர்.

எமிஸ் இணையதள புள்ளி விபரங்கள் பதிவு, 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் இணைய வழியாக தேர்வு நடத்துதல், பாடம் நடத்த விடாமல் ஆசிரியர்களை தொடர்ச்சியாக பயிற்சிக்கு அழைத்தல் போன்ற சித்ரவதைகளினால் பள்ளியிலேயே மாரடைப்பு, மரணங்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.

நீதிமன்றத்தில் சொல்வதைப்போல, மக்கள் மன்றத்தில் 'நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை', நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தோமே, அந்த வாக்குறுதி நிறைவேறி உள்ளதா என்று கேட்கின்றனர். போராட்டக் களத்தில் உள்ளவர்கள், முதலமைச்சர் சொன்னதைத்தான் நாங்கள் கேட்கிறோம். சொல்லாததை நாங்கள் கேட்கவில்லை, என்ற போராட்டக்காரர்களின் குரல் டிபிஐ வளாகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறோம். ஆனால் ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு வாரம் தோறும் தேர்வினை நடத்தி வருகிறோம். இது போன்ற தேர்வு எந்த மாநிலத்திலாவது உண்டா? புதிய கல்விக் கொள்கையில் ஆண்டுக்கு ஒருமுறை தான் தேர்வு நடக்கிறது. ஆனால் SCERT இயக்ககம் வாரம் தோறும் தேர்வினை நடத்தி ஏழை, எளிய மாணவர்களின் மனநிலையை அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சம்பாதித்துள்ள வாக்கு வங்கியினைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருப்பதால், SCERT இயக்குனர்கள் போன்றவர்களின் செயல்பாடுகள் அன்றாடம் ஆட்சிக்கு எதிராக ஆசிரியர்களை வெறுப்புணர்வினை பீறிட்டு எழச் செய்து வருகின்றனர்.

அவர்களின் உள்நோக்கம் எல்லாம், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்களின் வாக்கு வங்கி இப்போதய ஆட்சிக்கு ஆதரவாக பதிவாகக் கூடாது என்று திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளார். பெற்றோர்கள் செய்யும் தொழிலை பிள்ளைகள் தொடர வேண்டும் என்பதுதான் இதன் உள்நோக்கமாகும்.

பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள விளையாட்டுப் பொருள்களில் அவர்களது கட்சியின் வர்ணத்தை பூசியுள்ளனர். விளையாட்டுப் பொருட்களில் சமஸ்கிருத பெயரையும், இந்தி பெயரினையும் முழுவதுமாக திணித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இந்த அதிகாரிகளை நம்பி மீண்டும் விட்டு விட்டால், SCERT இயக்குனர் போன்றவர்கள் விஸ்வகர்மா யோஜனா போன்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் தொடங்கி நடத்துவதற்கு தயாராவர்.

அப்போதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எதையும் கண்டு கொள்ள மாட்டார் என்று எது வேண்டுமானாலும் செய்தாலும் செய்வார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை அழைத்து நிர்வாகத்தினை அவரது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் செய்யுங்கள். பாதிப்புகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

சட்டப்பேரவை கூடவுள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பற்றிய நினைவுகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகளுடைய விளம்பரத்தின் உண்மைத் தன்மையினை அறிந்து நிர்வாகத்தினை நெறிப்படுத்துங்கள். பாதிப்புகளுக்கு தீர்வுகாண முன் வாருங்கள். அதிகாரிகளினால் வாக்கு வங்கி சேதாரமாகி வருகிறதே, எங்கள் இதய குமுறல்களை காது கொடுத்து கேளுங்கள், நம்பிக்கை உணர்வுடன்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குடகனாறு அணை குறித்த வல்லுநர் அறிக்கை; கோட்டையை நோக்கி பேரணி நடத்த குடகனாறு பாதுகாப்பு சங்கம் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details