சென்னை: நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மகளிர் அணியின் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்காக தாய்மார்கள் பாலூட்டும் அறை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "தமிழ்நாட்டில் உள்ள அனைவரும், விஜயின் குடும்பம் தான்.
விஜய் மற்றும் மக்கள் இயக்கம் எப்போதும் மகளிருக்கு ஆதரவாக உடனிருக்கும். அதனால் ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். இனி மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மகளிர் அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 128 பயிலகம் செயல்பட்டு வருகிறது.
மாதம் ஒரு முறை மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை பணியில் மகளிர் அணியினர் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண வேண்டும். விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதியில் ஏதேனும் துறையில் சாதிக்கும் பெண்களுக்கு வீடு தேடி சென்று வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.