இது தொடர்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஒன்பது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து, பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும், ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெற்றோரிடமும், பள்ளிகளின் தலைமையாசிரியர் தலைமையில் நவம்பர் 9ஆம் தேதியன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த்தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
கடந்த சில நாள்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர்.
நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16ஆம் தேதி அன்று நேரடியாக பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக மாட்டார்களா? நோய்த்தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த்தொற்று பரவ காரணமாக மாட்டார்களா?
மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்களே மக்களுக்குரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனைபெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பெற்றோர் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.