கரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள நுண்ணுயிரியல் அறிஞர் ஹேமலதா வரதன், அட்லாண்டாவில் உள்ள விஜயகுமார் வேலு ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உடன் இருந்தார். பின்னர் அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம், "இந்தக் காணொலி கலந்தாய்வு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மனிதரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்று பரவும் நிலை இதுவரை இல்லை.
இதுபோன்று தொற்று பரவும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பியவர்.
அவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார். வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களையும் காவல் துறை உதவியுடன் சோதனைச்சாவடிகளில் நிறுத்தி தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறோம்.