எதிர்க்கட்சிகளிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது: துரைமுருகன் பேச்சு - துரைமுருகன்
சென்னை: எதிர்க்கட்சிகளிடம் அரசு பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும், நாங்கள் குற்றம் குறைகளைதான் செல்வோம் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் பேசிய பூந்தமல்லி தொகுதி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி, எனது தொகுதியில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் இறந்திருக்கிறார்கள். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் டெங்கு காய்ச்சலால் யாருமே இறக்கவில்லை என சொல்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும், அரசு கணக்கில் வருவதில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலால் இறந்தாலும் அரசு கணக்கில் வருவதில்லை என்றால் எப்படி அரசுக்கு மக்களை பற்றித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் சிறப்பாக உறுப்பினர் பேசுகிறார். சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கின்றன, அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும், இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத உறுப்பினர், குற்றம் குறைகள் இருக்கிறதா என தேடிப்பார்த்துப் பேசுகிறார் என்றார்.
இதற்கு குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் லாலி பாடுவதற்கு பேரவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சிகளிடம் அரசு பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் குற்றம் குறைகளைதான் சொல்வோம் என்று தெரிவித்தார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அண்ணா கூறியதாக தெரிவித்தார்.
இதற்கு, மலருக்கு மணம் இருந்தால் பரவாயில்லை. காகித பூவாக இருந்தால் என்ன செய்வது என துரைமுருகன் பேசியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.