சென்னை:மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 2023ஆம் கல்வியாண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பயிற்சி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம் மூலம் வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடக்க கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், “கடந்த 21.5.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவானது. 2021 - 2022ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது.