தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊரடங்கில் பதியப்படும் வழக்குகள் எதிர்காலத்தைப் பாழாக்கும்' - இளைஞர்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை - dont come out from home, ramadoss advised the youngster

ஊரடங்கு காலத்தில் பதியப்படும் வழக்குகள் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என இளைஞர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk ramadoss
pmk ramadoss

By

Published : Apr 16, 2020, 3:43 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்து இன்றுடன் இரண்டு நாள்களாகிவிட்ட நிலையில், அதை மதிக்காமல் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவது அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. ஊரடங்கை மீறுவோர் மீது தொற்றுநோய் சட்டப்படி தொடரப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்டோரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்படும் இளைஞர்கள் உடனுக்குடன் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். அவ்வாறு செய்வதாலேயே பிரச்சினை முடிந்து விட்டதாக இளைஞர்கள் கருதக்கூடாது. இத்தகைய வழக்குகள் அனைத்தும் தொற்றுநோய் சட்டம், பொதுச் சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்டவற்றின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்களாக இருந்தால், இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை பணிக்குச் செல்ல முடியாது; புதிதாக எந்தப் பணிக்கும் விண்ணப்பிக்கவோ, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்தப் பணியில் சேரவோ முடியாது; பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களைப் பெற முடியாது என்று தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவதால் கரோனா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தும், மற்றவர்களுக்கு நோயைத் தொற்றவைக்கும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கடந்து ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நீங்கள் உங்களின் எதிர்காலத்தையே இழக்க நேரிடும். ஆகவே தமிழ்நாடு மக்கள் அனைவரும் உங்களின் சொந்த நலன் கருதியும், பொதுநலன் கருதியும் ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், காவல் துறையினரும் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்பரண்களை அமைத்து மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும்; தேவையின்றி ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'சோப்பு போட்டு கைகழுவுங்கள்' - அன்புமணி ராமதாஸின் கரோனா விழிப்புணர்வு வீடியோ

ABOUT THE AUTHOR

...view details