சென்னை:சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 30) வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "எல்லா கோட்டைகளும் அஸ்திவாரத்தின் மீது தான் கட்டப்படும். திராவிட இயக்க கோட்டை ஈரோட்டு கை தடியால் கட்டப்பட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கிற்கு அனிதாவின் பெயரை சூட்டிய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் அளவில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் சுயசார்பு பெற்றிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் சராசரியாக 25ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டன. மீண்டும் திமுக ஆட்சியமைந்த உடன் இரண்டு ஆண்டுகளில் 86,000 சுய உதவிக்குழுக்கள் அமைத்து சாதனைப் புரிந்துள்ளது.
70,800 சுயஉதவிக் குழுக்களுக்கு 87.37 கோடி சுழல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 50,000 உற்பத்தியாளர்களுக்கு 50 கோடி தொடக்க நிதி, 3 மாதங்களில் 1000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10,000 கோடி வங்கி இணைப்பு, அனைத்து கிராமங்களும் நீடித்த நிலையான வளர்ச்சியை அடைய 20 கோடியில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 84,815 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. வெறும் கணக்கு காட்டுவதற்காக செய்தவர்கள் மத்தியில், 2021ல் திமுக ஆட்சி அமைந்ததன் பின் இரண்டு ஆண்டுகளில் அதன் இலக்கான 45 ஆயிரம் கோடியையும் தாண்டி, 46,414 கோடி என்ற சாதனையைப் புரிந்துள்ளோம்.
எந்த மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் தான் நான் சாப்பிடுகிறேன். அதின் நானும் ஒரு பயனாளி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற 3 மாதத்தில், திண்டுக்கல், சிவகங்கை, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று அமைச்சராக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டமும் நடத்தினோம். என்ன திட்டம் நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம்.
அதிமுக உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முறையாக உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் கருத்துகளை ஆலோசனைகளை எங்களுக்கு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: "நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிடுக"- சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!