சென்னை:வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்யத் தடை விதித்து அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு நாய் இனங்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, நாய்களை இறக்குமதி செய்யத் தடை செய்ய, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையில் உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்களது அந்த மனுவில், ”வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல் ஆய்வு பற்றிய தகவல்களும், புள்ளிவிவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்”. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்த பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு நாய்களுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களால் நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.