சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர், சர்மிளா (29). இவரது வீட்டில் கோல்டன் ரெட்ரைவர் (Golden Retriever) எனும் பிரிட்டிஷ் வகை நாய் ஒன்றை சார்லி என பெயரிட்டு செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு சர்மிளா மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும்நிலை ஏற்பட்டதால், நாய் சார்லியை கவனித்துக் கொள்ள முடியாது என, சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் செல்லப்பிராணி பராமரிப்பு நிறுவனமான பெட் பவ்'ஸ் (Pet paws) மையத்தில் ஒப்படைத்துள்ளார். நாயை பராமரிப்பதற்கு மாதக் கட்டணமாக 12 ஆயிரம் ரூபாய் அவர் செலுத்தி வந்துள்ளார்.
நாயை அடித்துக் கொன்று நாடகம்
ஜெர்மனியில் இருந்த அவரிடம் கடந்த 3ஆம் தேதி மார்ட்டின் என்ற ஊழியர் தொடர்புகொண்டு, சார்லி மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக சர்மிளா ஜெர்மனியிலிருந்து சென்னை புறப்பட்டு வந்து நாயின் உடலை பெற்றுக் கொண்டு, கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் புதைத்துள்ளார்.
பின்னர் பெட் பவ்'ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம், ஊழியர் மார்டின் இருவரும் தனது செல்லப்பிராணி சார்லி மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நன்றாக இருப்பது போன்ற ஒரு சிசிடிவி வீடியோவை தன்னிடம் காண்பித்ததாகவும்; அது சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் சர்மிளா குற்றஞ்சாட்டினார்.
செல்லப்பிராணி பராமரிப்பு மைய ஊழியர்கள் கைது
பின்னர், அவர் பெட் பவ்'ஸ் நிறுவனத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளை வாங்கி பரிசோதித்துப் பார்த்துள்ளார். அதைப் பார்த்த சர்மிளா, ஊழியர்கள் நாயை தாக்கி தரதரவென ஒரு அறைக்குள் எடுத்துச்செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும், எனவே தனது செல்லப் பிராணியான சார்லியை நிறுவனத்தின் ஊழியர்கள் அடித்துக்கொலை செய்திருப்பதாகவும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் வேளச்சேரி காவல் துறையினர் நிறுவன உரிமையாளர் மார்டின், ஊழியர்கள் ராம், சூரஜ் ஆகியோர் மீது மிருகவதை தடைச் சட்டம் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:எரியும் பனிக்காடு - வெயிலால் தீப்பற்றி எரிந்து சேதமாகும் காடுகள்