சென்னைவண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலே மிகப்பெரிய விலங்குகள் பூங்காக்களுல் ஒன்றாகும். இங்கு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பூங்கா, கரோனோ கட்டுப்பாட்டுத் தளர்விற்கு பிறகு திறக்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை நாள்களில் அதிகமான பார்வையாளர்களுடனும், வார வேலை நாள்களில் கணிசமான பார்வையாளர்களுடனும் பூங்கா செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரத்து வார நாள்களிலே அதிகமாக காணப்படுகிறது.
அதிலும், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மிகவும் அதிகமான எண்ணிகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், பொழுதுபோக்கினை முதன்மையாகக் கொண்டு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா பெரும் ஏமாற்றத்தை மட்டுமே தருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்குக் காரணமாக, செயற்கை முறையில் விலங்குகளை குளிப்பாட்டும் வசதி இல்லை எனவும், வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி கூட இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.