சென்னை:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 'தமிழ் நிலம்' மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மூன்று இனங்களாகப் பிரிப்பு
அவற்றுள் தற்போது முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ’அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியன பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இத்துறையின் இணையதளத்தில் நாளை (09.06.2021) வெளியிடப்படவுள்ளது. இது மொத்தமுள்ள நிலங்களில்
72 விழுக்காடு ஆகும்.
பொதுமக்கள் இத்துறை இணையதளத்தில் 'திருக்கோயில்கள் நிலங்கள்' என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள திருக்கோயிலைத் தேர்வு செய்தவுடன் திருக்கோயிலுக்குச் சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும்.
அந்நிலங்களின் ’அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி பகுதியாக ஒத்துப்போகும் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத்துறை ஆவணங்களோடு ஒத்தாய்வு செய்யப்பட்டு, உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக மாற்றம் செய்யப்பட்டு பின்னர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
கோரிக்கைகளை பதிவிடும் வசதி
திருக்கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களது பெயரிலேயே இருக்கும் வகையிலான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக எடுக்கப்படும். மேலும், இது குறித்து ஏதேனும் கருத்துக்களை அல்லது கோரிக்கைகளைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் 'கோரிக்கைகளைப் பதிவிடுக' திட்டத்தின் கீழ் பதிவிடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்’ - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு