சென்னை:2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டபோதும், தற்போது வரை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே உள்ளன. பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதே, இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் தரப்பினர் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால், உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்மானங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஈபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினரும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இதற்கு எதற்கும் பதிலளிக்காமல் தேர்தல் ஆணையம் மௌனம் காத்து வந்தது.