சென்னை:இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒயின், பீர், பிராந்தி, விஸ்கி, நாட்டு சாரயம் உள்ளிட்ட அனைத்து எத்தனால் கலந்த மதுபான வகைகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு தீவிர உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் குறைவாகவே இருப்பது வருத்ததிற்குரியது. மருந்திற்காக உட்கொள்ளப்படும் ஆல்கஹால் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்டவைகள் ஏற்பட துணைக்காரணியாக இருக்கிறது.
நமது உடலில் ஆல்கஹால்:இதுகுறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின்(Govt Kilpauk Medical College), ராயப்பேட்டை புற்றுநோய் சிறப்பு மையத்தின் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் சுப்பையா சண்முகம்ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலந்த சாரயத்தை அருந்துவதால் புற்றுநோய் வருகிறது. மதுவை அளவாக மருந்து அளவிற்கு அருந்துவதால் உடல் நலத்திற்கு நன்மை என்று சில ஆய்வில் கூறுகின்றன. மனிதர்கள் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு நம் உடலிலேயே உள்ள ஆல்கஹால் பயன்படுகிறது.
மதுவை சமூகத்திற்காகவும், நண்பர்களுடன் இணைந்து ஒரு சில நாட்களில் குடிக்கிறோம் என்று ஆரம்பித்தால், மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். மதுவை அருந்துபவர்கள் சரிவிகித உணவை உண்ணாமல் இருக்கின்றனர். மது அருந்தியப் பின்னர் வயிறு நிறைந்து விடுவதால் உணவையும் தவிர்கின்றனர். இதனால், புற்றுநோய் நேரடியாக வராவிட்டாலும், பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என கூறப்பட்டு இருந்தாலும், போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அதிகளவில் மது அருந்துகின்றனர்.
கேடு தரும் புகையிலை:புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும்போது, அதில் உடல் நலத்திற்கு கேடு விளைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புகையிலை, ஆல்கஹால் கலந்த மதுவை அருந்தும் பழக்கத்தை பொதுமக்கள் முழுவதும் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.