தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை வெப்பம் - உடல் சூட்டை குறைக்க மருத்துவர்கள் டிப்ஸ்! - கோடை வெப்பம்

கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் சூடு, உடல் பிரச்னைகளை சமாளிக்க மருத்துவர்கள் பல்வேறு டிப்ஸ்களைத் தெரிவித்துள்ளனர். அவையாவன

Etv Bharat
Etv Bharat

By

Published : May 22, 2023, 8:06 PM IST

கோடை வெப்பம் - உடல் சூட்டை குறைக்க மருத்துவர்கள் டிப்ஸ்!

சென்னை:தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயிலிலால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் தற்போது அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை கோடை வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளைப் பார்ப்போம். இது குறித்து மருத்துவர் சாந்தி கூறுகையில், “தற்போது கோடை வெப்பம் சற்று அதிகமாக பதிவாகி வருவதால் கோடைகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.

உடல் சூடு ஏற்பட்டு அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால், தோல் நோய்கள், பூஞ்சை காளான்கள், வெப்ப தளர்ச்சி, அம்மை நோய்கள், சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், பொதுமக்கள் மதிய வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் நபர்கள் பருத்தி ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும்.

வெளியில் சென்று வீடு திரும்பியவர்கள் கட்டாயம் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கலாம். இது போன்ற கோடை காலங்களில் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீரை கட்டாயம் பருக வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இளநீர், மோர், பதநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், அண்ணாச்சி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும். இது கோடைகால வெப்பத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

அதேபோல் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் சூட்டை குறைக்கலாம். மேலும், இது போன்ற உணவு முறைகளால் வெப்ப காலங்களில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையும் தீரும். முதியவர்கள் கடும் வெயிலில் வெளியே செல்லும் பொழுது உடலில் நார்ச்சத்து குறைந்து வெப்ப மயக்கம், வெப்ப தளர்ச்சி ஏற்படும். எனவே, முதியோர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கோடை காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் (Refrigerator) வைக்கப்படும் மிகக் குளிர்ந்த நீரை குடிக்கும் பொழுது தொண்டையில் ஒரு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். அதேபோல் உணவகங்களில் வறுத்த, பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து வீட்டிலே தூய்மையான உணவுகளை சமைத்து சாப்பிடுதல் உடல் நலத்திற்கு நல்லது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பாரம்பரிய சித்த வைத்தியர் பாலு கூறுகையில், “கோடை காலத்தில் உடலில் பல்வேறு வகையான சூடு ஏற்படுகின்றன, கன சூடு, கபாலச் சூடு, நேத்துர சூடு ஆகியவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளால் உடல் வலி, உடல் உஷ்ணம், சிறுநீரகப் பிரச்னை போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சிறு கீரை அதிகளவு உட்கொள்ள வேண்டும். மீண்டும் அதேபோல் மணத்தக்காளி கீரை, தவசி கீரை சாப்பிடுவதன் மூலம் வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண், ஜீரண பிரச்னை உடல் சூடு ஆகியவற்றைத் தவிர்க்க முடியும். தினமும் மதிய உணவிற்குப் பிறகு, பசு மோரில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, அதைப் பருகினால் உடலில் ஏற்படும் கனச் சூட்டை குறைக்கலாம்.

வாரத்திற்கு ஒரு நாள் சோற்றுக்கற்றாழை உடன் எலுமிச்சை சாறு, மோர் கலந்து குடித்து வந்தால் கண் எரிச்சல் பிரச்னைகள் உடனடியாக சரியாகிவிடும். கபால சூட்டைத் தவிர்த்து, வயிற்று குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் அம்மான் பச்சரிசி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு, கண் எரிச்சல் நீங்கும். அதேபோல் கல்லீரல், மண்ணீரல் பாதிப்புகளை சரி செய்யும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும், உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும்.

வாரத்தில் ஒரு நாளாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும். அதேபோல் மாதத்திற்கு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை மண் குளியல் குளிக்க வேண்டும். உடலில் மண்களை தேய்த்து குளித்தால் படை, அரிப்பு வராமல் தடுக்க முடியும். இது நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு செய்த ஒன்று. இதுவெப்ப காலங்களில் செய்தால் உடலுக்கு நல்லது.

கோடைகாலங்களில் ஏற்படும் விஷ காய்ச்சலைத் தவிர்க்க நிலவேம்பு, நொச்சி, தும்பை போன்ற இலைகளுடன் மிளகு சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை அதை கசாயமாக குடித்தால் எல்லா வித விஷ காய்ச்சலில் இருந்தும் தப்பிக்க முடியும். வெள்ளரிக்காய், வெண் பூசணி போன்ற காய் வகைகள் உடல் சூடு, சிறுநீரகப் பாதிப்புகள், கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றை கோடை காலங்களில் ஏற்படாமல் தவிர்க்கும்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாறாக உட்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த பொருட்களை நாம் உட்கொண்டு வரும்போது கோடைகாலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கொலஸ்ட்ரால், பிபி இருக்கா?... சமீபத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details