சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2009இல் அரசாணை 354 மூலம் மருத்துவர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய திருத்தம் வழங்கினார்.
கடந்த 15 ஆண்டுகளாக இதை சரி வர வழங்கப்படவில்லை. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ன ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனபதை பல தரப்பட்ட போராட்டங்களை நடத்தியும், 2017 மற்றும் 2022 ல் நடத்தாமல் அரசு வஞ்சித்து வருகிறது.
இதனால் சுகாதாரத்துறையை இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக அரும்பாடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். தங்கள் உயிரை கரோனா காயத்தில் துச்சமாக கருதி மக்களுக்கு சேவை செய்த அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக அரசாணை 354 மூலம் உரிய பதவி உயர்வு மற்றும் ஊதிய திருத்தம் செய்து அறிவிக்கப்பட்ட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரத்தை மாற்றி அமைத்த அரசாணை 225-யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு காலை 9 மணி முதல் 4 மணி வரையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். தற்போது காலை 8 மணி முதல் நடைபெறுவதால் பொது மக்களுக்கும் பயன் அளிக்கவில்லை.
மக்கள் தங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இதர மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. உடனடியாக அவற்றை நிரப்ப வேண்டும். இதனால் பணிச்சுமை குறைந்து மக்களுக்கு நல்ல முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.
அரசு மருத்துவர்கள் மருத்துவ தேர்வாணையம் மூலம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் தொகுப்பூதியத்தில் தற்காலிமாக பணி அமர்த்தும் நடவடிக்கையை உடனடியாக கை விட வேண்டும். சமூக நீதி பேசும் ஆட்சியில் இது நடப்பது வேதனையளிக்கிறது. கடந்த ஆட்சியின் போது தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் மூலம் தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், அப்போதைய அரசு மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அரசின் நிதியையும் சேர்த்து, காலமுறை ஊதியத்தில் மருத்துவர்களை நியமனம் செய்தது. கடந்த 2005ஆம் ஆண்டில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களை திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி பொறுப்பெற்ற பின்னர் 2006ஆம் ஆண்டில் காலமுறை ஊதியத்தில் பணியில் சேர்த்தார்.