சென்னை:கல்லூரி மாணவியும், கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியாவுக்கு, பெரியார் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், வலது கால் முட்டியில் மேற்கொண்ட தவறான அறுவை சிகிச்சையில், ரத்த நாளம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மருத்துவர்களான சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நடத்திய ஆய்வில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவினால் தான் மாணவி உயிரிழந்தார் என மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோரை மருத்துவக் கல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டப் புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்கிற சட்டப்பிரிவை மாற்றி அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்னும் பிரிவின் அடிப்படையில், பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு மருத்துவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இரு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த இரு மருத்துவ நிபுணர்கள், கொளத்தூர் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய நான்கு பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் இரு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த கேள்விகள் தயார் செய்யப்பட்டன.
பிரியா வழக்கில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்கள் இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், இரு மருத்துவர்களிடமும் தனித்தனியாக சுமார் 2 மணி நேரம், விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. மாணவி பிரியா சிகிச்சைக்கு கொண்டு வந்தது முதல் இறப்பு வரை என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளை இரு மருத்துவர்களிடமும் விசாரணைக்குழு முன்வைத்தது.
இந்த கேள்விகளுக்கு இரு மருத்துவர்களும் அளித்த வாக்குமூலம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் எனவும்; இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செவிலியர் மற்றும் மீதமுள்ள மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தல் - போலீஸார் சொன்ன அந்த வார்த்தை