சென்னை: இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது, "முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிவருகிறார்.
மேலும் கரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு, சுதந்திர தினத்தன்று துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்த மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
எதிர்பார்ப்போடு காத்திருந்தோம்
தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை எந்த முதலமைச்சரும் சந்தித்திராத வகையில், ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனாவின் தாக்கத்தால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இருப்பினும் முதலமைச்சர் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.
அன்றுமுதல் இன்றுவரை நம் முதலமைச்சருக்கு கரோனா பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம், அரசு மருத்துவர்களும் நினைவில் வருவர் என்று நம்புகிறோம். கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் பலமாகக் களத்தில் நிற்பது 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தாம் என்பது முதலமைச்சருக்கு நன்றாகவே தெரியும்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறேன் எனப் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, உண்மையில் ஒவ்வொரு மருத்துவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். விரைவில் நம் கோரிக்கை நிறைவேறப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு அன்றுமுதல் காத்திருக்கிறோம்.
நேரடியாக உறுதி அளித்த முதலமைச்சர்
அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது முதலமைச்சர் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது அடுத்து அமையும் நம் ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு மருத்துவரிடத்திலும் இருக்கிறது.