திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பொதுச்செயலாளர் துரைமுருகன், அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்குத் தேர்தல் பரப்புரையை அடுத்து கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த குஷ்புவின் கணவர் சுந்தர். சிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இதேபோல் தேர்தல் களத்தில் பணியாற்றிய தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பிரமணியன், புதுச்சேரி நெடுங்காடு தனித்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து எனத் தொடர்ந்து பெரும்பாலான வேட்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இவர்களுக்கே கரோனாவெனில்?
இவர்களில் பலர் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் கரோனா பிடியிலிருந்து தப்பவில்லை. இதையடுத்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத் துறை தரப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பரப்புரை மேற்கொண்ட அரசியல் தலைவர்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளபோது, தேர்தல் பரப்புரையின்போது கூட்டம் கூட்டமாகக் குவிந்த மக்களின் நிலை என்ன என்ற கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இது முதல் அலை கரோனா பாதிப்பைவிட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
இரண்டாம் அலை
கரோனா பரவலின் தாக்கம் இரண்டாம் அலையாக உருவாக தேர்தல் நேரத்தில் முகக் கவசங்கள் இன்றியும், போதிய இடைவெளிகளைப் பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுமே முக்கியக் காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்குப்பின் தொற்று குறைய தொடங்கியபின் மக்கள் கரோனாவை மறந்து இயல்புவாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பினர். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவியதால் நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தாக்கம் முதலில் கடுமையான விதிகளின் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கோயில் திருவிழாக்கள், தேர்தல் பரப்புரை காரணமாக மின்னல் வேகத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று மக்களிடம் பரவிவருகிறது.