சென்னை: கரோனா தொற்று காலத்தில், கடந்த ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மிகவும் மன அழுத்ததுடன் பணியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 20,000 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும் கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மிகவும் மன அழுத்ததுடனே பணியில் உள்ளனர்.
மேலும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவர்கள் மூச்சுதிணறலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். நோயாளிகள் மூச்சு விடுவதற்கு சிரப்படுவதை பார்க்கும் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆறு மாதத்திற்கு 2,100 மருத்துவர்களை, மாதம் 60 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, "அரசு மருத்துவமனைகளின் சேவையே மேம்படுத்தும் வகையில் 2100 மருத்துவர்களை நியமனம் செய்வது என்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாடு மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. நாள்தோறும் புதிய படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நோயாளிகள், படுக்கைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.