சென்னை: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி மருத்துவமனைகளை அரசு மருத்துவமனைகளுடன் இணைக்க வேண்டும், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், “மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிய துறைசார்ந்த மருத்துவ நிபுணர்களின் குழுவை நியமிக்க வேண்டும்.
பேறு கால மரணங்கள், தொடர்பாக தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பரப்புவது, மகப்பேறு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது. எனவே, உண்மையான காரணங்களை முழுமையான கோணத்தில் அலசி ஆராய்ந்து பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். அதைவிடுத்து பணியில் இருக்கும் மருத்துவரை எல்லாவற்றிற்கும் காரணமென குற்றம் சாட்டி, பலிக்கடா ஆக்கும் போக்கை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பேறுகாலத் தாய் மரணம் ஒரு லட்சம் உயிருள்ள குழந்தை பிறப்பிற்கு 54 தாய் மரணம் என்ற விகிதத்தில் உள்ளது. அதே நேரத்தில், கேரளாவில் இந்த விகிதம் 19 ஆக மிகவும் குறைந்துள்ளது. பேறுகால இறப்பு குறைவாக உள்ளதில், முதல் மாநிலமாகக் கேரளா உள்ளது. இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிராவில் இவ்விகிதம் 33 ஆக உள்ளது.