தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக்கோரி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தக்கோரி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ரவீந்திரநாத்

By

Published : May 14, 2019, 2:27 PM IST

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மின் வெட்டால், வெண்டிலேட்டர் செயலிழந்து, மதுரை இராசாஜி மருத்துவமனையில் இறந்த நோயாளிகளின் குடும்பத்தினர், கெட்டுப்போன ரத்தம் செலுத்தியதால் ஓசுர், தருமபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் இறந்த கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினர், எச்ஐவி கிருமி உள்ள ரத்தத்தை சாத்தூர் அரசு மருத்துவமனையில் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவங்கள் குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ரத்தப் பரிசோதனை நிலையங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப் படுத்துவதை கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் தனி மின் இணைப்புகளை வழங்க வேண்டும். ஜெனரேட்டர்கள், யுபிஎஸ் கருவிகளை வழங்க வேண்டும்.

அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், உபகரணங்கள் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகளே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். கருவிகள், மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மே.15) காலை 10.30 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், பேரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன. ஆர்ப்பாட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடக்கி வைக்கிறார், என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details