தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது' - ரவீந்திரநாத் - Bjp party

சென்னை: "முதுநிலை மருத்துவம், உயர்சிறப்பு மருத்துவத்தில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது. இதனால் அரசு மருத்துவமனைகளும், அதை நம்பியுள்ள ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்", என்று டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

மருத்துவர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Apr 15, 2019, 4:40 PM IST


சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடியின் ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையும் சீரழிக்கப்பட்டுவிட்டது. தேசிய நலக்கொள்கை-2017 மக்கள் நலன்களுக்கு எதிரானது. இது மக்கள் நல்வாழ்வுத் துறையை முழுமையாக தனியார் மயமாக்கும் நோக்கம் கொண்டது. அதேபோல ஆயுஷ்மான் பாரத் திட்டம், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை அரசு மருத்துவ நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிடும். மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.32 விழுக்காட்டில் இருந்து 0.29 ஆகவும், கல்விக்கான நிதி ஒதுக்கீடு 0.49 விழுக்காட்டிலிருந்து 0.45 ஆகவும் குறைக்கப்பட்டது.

பன்னாட்டு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் பயனடையும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்டத் தொகையை, தனியார் மருத்துவமனைகளுக்கும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் வாரி வழங்கும் திட்டம்தான் இது. இந்த நிதியைக் கொண்டு, ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளை அரசே உருவாக்க முடியும். நாடு முழுவதும் 1.50 லட்சம், சுகாதார மற்றும் நல மையங்களை உருவாக்குவதாக பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ 1200 கோடி ஒதுக்கப்பட்டது. இவை புதிய மையங்கள் அல்ல. ஏற்கனவே உள்ள துணை சுகாதார நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் 1,55,708 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பது, மக்கள் நலனுக்கு எதிரானது. ராஜஸ்தான், மராட்டியம், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. பாஜக அரசு, மாநில அரசுகளை நிர்பந்தப்படுத்தப்படுத்தி, மாவட்ட மருத்துவமனைகளில் ஒரு பகுதியை தனியாருக்கு வழங்கச் செய்தது. மாநில அரசுகள் தொடங்கும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை, மத்திய அரசு தொடங்குவதுபோல் மோசடித்தனமான அறிவிப்பை மத்திய பாஜக அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் எனும் அறிவிப்பு கிடப்பில் உள்ளது. அதற்கான கால நிர்ணயமோ, நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை.

மருத்துவக் கருவிகள் மற்றும் சாதனங்கள் உற்பத்தியில் 80 விழுக்காட்டிற்கு மேல் இந்தியாவில்தான் செய்யப்படுகின்றன. இத்துறையில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அவசரச் சட்டம் கொண்டு வந்தார் மோடி. இதனால், மருத்துவக் கருவிகள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி பன்னாட்டு ஏகபோகங்களின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலியோ தடுப்பூசியின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ.61 க்கு கிடைத்த போலியோ ஊசி, 2019 ல், ரூ.147 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை மோடி அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

காச நோயால் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார். இந்நிலையில், காச நோயை குணப்படுத்தும் மருந்துகள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அனைத்து மருந்துகளையும், தடுப்பு ஊசிகளையும், மருத்துவ சாதனங்களையும், மருத்துவக் கருவிகளையும் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் பாஜக அரசு எடுக்கவில்லை. மேக் இன் இந்தியா என்பது வெற்று முழக்கமே. மத்திய பட்ஜெட்டில் மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதன்படி 82 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான பட்டியலும் வெளியிட்டது. அதில், ஒரு இடம் கூட தமிழகத்திற்கு இல்லை. தென் மாநிலங்களுக்கும் இல்லை. தென்மாநிலங்களை மத்திய பாஜக அரசு வஞ்சித்துவிட்டது.

மருத்துவர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு

மாவட்டம் தோறும் அரசு தனியார் கூட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. இது மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியாகும். மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கி, அவற்றின் மூலம் மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதுதான் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். நீட் நுழைவுத் தேர்வு தொடரும் என பா.ஜ.க அரசு கூறியுள்ளது. இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடுத்தியுள்ளார். இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். முதுநிலை மருத்துவம், உயர்சிறப்பு மருத்துவத்தில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது. இதனால் அரசு மருத்துவமனைகளும், அதை நம்பியுள்ள ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details