சென்னை: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் பணி நியமிக்க மாட்டோம் என திமுக கூறியது. ஆனால், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. மீண்டும் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்' சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் , எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேஷ் கூறும்போது, “கடந்த 2019ஆம் ஆண்டு MRB தேர்வில் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டோம்.
எங்களுக்கு முன்னர் 2ஆயிரத்து 300 செவிலியர்கள் மற்றும் எங்களுக்கு பின்பு 950 செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, பின்னர் ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து அரசால் ஈர்த்துக்கொள்ளப்பட்டது. இதேபோல், கரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட சுமார் ஆயிரத்து 331 மருத்துவர்களை நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், சுமார் 3ஆயிரத்து 200 செவிலியர்களைத் தொடர்ந்து கரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என தொடர்ந்து பணிநீட்டிப்பு செய்து கடந்த 2 வருடம் 7 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி எங்களை மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பொதுத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின் விளைவாக அந்த ஆணையை ரத்து செய்து பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்த செவிலியர்களாக ஈர்த்துக் கொள்ளப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தற்போது 30.12.2022, இரவு 8 மணி அளவில் MRB Covid 2472 தற்காலிக செவிலியர்களை பணியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது MRB கோவிட் செவிலியர்களும் மிகுந்த மன உளைச்சளையும் மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டோம்.