சென்னை: பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்தும், இறந்தவர்களுக்கும், திட்டம் நடைமுறைக்கு வராதா காலத்திற்கு முன்பே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்தும் விசாரணை நடத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் கூறியதாவது, "அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக ரூ.1500 மட்டுமே மாதத் தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு, தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ரூ.15,000 ஊதியம் கிடைத்திடும் வகையில் அவர்களை பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணிநியமனம் செய்து உதவியுள்ளது.
பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் உருவாகும் பொழுது, எஞ்சியுள்ள தூய்மை பணியார்களையும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணி நியமனம் செய்து ஊதிய உயர்வு வழங்குவதாக தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பது போல் பல் மருத்துவ படிப்பிற்கும் மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவப் படிப்புகளில் மாநில உரிமைகளை பறிப்பது சரியல்ல. எனவே, நெகஸ்ட் தேர்வை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.
பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கியதாகவும், திட்டம் நடைமுறைக்கு வராதா காலத்திற்கு முன்பே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
ஒரே கைபேசி எண்ணில் பல லட்சம் பேருக்கு, மருத்துவக் காப்பீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பயனாளிகளுக்கு, மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு (discharge) அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு, அவ்வறுவை சிகிச்சைக்களுக்காவும் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.