இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது; “முதுநிலை மருத்துவப் படிப்பை கடந்த மே 31 ஆம் தேதியுடன் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் முடித்துள்ளனர். அவர்களில் அரசு ஒதுக்கீடு மூலம் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட கவுன்சிலிங்கை புதிய அரசு நடத்தியது .இது வரவேற்புக்குரியது.
அதுமட்டுமன்றி, ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டதால் மருத்துவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற அலைச்சலும், கால விரயமும் தடுக்கப்பட்டது. இது அரசு மருத்துவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் வைத்தது போல், அரசுப் பணி சாராத, முதுநிலை மருத்துவம் பயின்ற மருத்துவர்களுக்கும் ஆன்லைன் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்திட வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து காலிப்பணியிடங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் காட்டி, ஆன்லைன் கவுன்சிலிங்கை நடத்தி பணி அமர்த்த வேண்டும்.