திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் 16 வயதான கௌரி சங்கர். இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றும் வயிற்று வலி நிற்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனித உடலுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் முக்கிய உறுப்பான மகா தமனியில் சிறிய வீக்கம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பின்னர், சிறுவன் கௌரி சங்கருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர். சிறுவன் கௌரி சங்கருக்கு அக்டோபர் 30ஆம் தேதி மகா தமனியிலிருந்த வீக்கத்தை அகற்றி அறுவை சிகிச்சையின் மூலம் ரத்தக்குழாய் பொருத்தினர்.
இது குறித்து ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, "ரத்தநாளவியல் துறைத் தலைவர் ஸ்ரீதரன், இருதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் ஜோசப் ராஜ், மயக்கவியல் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் கொண்ட குழு அக்டோபர் 30ஆம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மகா தமனியில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது.
சிறுவனுக்கு வயிற்றில் உள்ள பெரிய ரத்தக் குழாயான மகா தமனியின் முக்கியமான பகுதியில் சிறிய பந்து அளவிற்கு வீக்கம் ஏற்பட்டு வெடிக்கின்ற நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு சிறுவன் வந்தார். தற்போது அவர் முழுவதும் குணமடைந்துவிட்டார். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - அரசு மருத்துவமனையில் அவலம்!