சென்னை:ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில்," ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணங்களை, இதர தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மிக மிக காலதாமதமான நடவடிக்கை என்றாலும், இது வரவேற்கத்தக்கது.
2014ஆம் ஆண்டு முதல் நடத்திய தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது பயிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் இந்த அரசாணை வெளிவர காரணமாகியுள்ளது. இந்த அரசாணை மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என மிரட்டி, கல்லூரி நிர்வாகம் ஒரு பிரிவு மாணவர்களிடம் வசூல் செய்துள்ளது. மிரட்டி வசூல் செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாயை உயர் கல்வித்துறை மாணவர்களுக்கு உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும்.