சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(பிப்.09) மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் 130 கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அந்த சாலைகள் குறுகலாக இருப்பதால் தாழ்தள பேருந்துகளை இயக்கினால் பேருந்துகள் கடுமையாக சேதமடைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.