தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களின் குரல்வளையை நெரிக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களின் குரல்வளையை நெரிக்கக் கூடாது என்றும், அதற்காக அம்பலப்படுத்துவதாகக் கூறி அத்துமீறுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களின் குரல்வளையை நெரிக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களின் குரல்வளையை நெரிக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

By

Published : May 27, 2022, 10:20 PM IST

சென்னை: சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்திருந்தார்.

அதில், “சேலம் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர், கோயில்களின் சொத்துகளையும் நிலங்களையும் பாதுகாப்பதாகவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதாகவும் கூறி வழக்குத் தொடர்ந்தார்.

அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வைத்துக்கொண்டு, ஆய்வு என்ற பெயரில் கோயில் தொடர்புடைய நடவடிக்கைகளில் தடையிட்டு மிரட்டுகிறார். மேலும், பக்தர்கள் தரிசன நடைமுறைகளிலும் இடையூறு ஏற்படுத்துகிறார்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (மே 27) உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஜெ.சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘நான் கோயில் சொத்துகளையும், நகைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் எதிரிகளை சம்பாதித்துள்ளேன். நான் சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகளையும் மிரட்டவில்லை. இதுகுறித்து உத்தரவாதம் ஒன்றையும் நான் அளிக்கிறேன்’ என மனுவாக அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தனது முறையீடுகளுக்கு நிவாரணம் கேட்க மனுதாரருக்கு உரிமையுள்ளது. அதை நீதிமன்றமோ, அலுவலர்களோ நெரிக்கக்கூடாது. சில அலுவலர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக ஊழலை அம்பலப்படுத்துவதாகக் கூறி அத்துமீறி செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அலுவலர்கள், காவல் துறையில் புகார் அளிக்கலாம். கோயில்களுக்கு செல்லும்போது அங்கிருப்பவர்களுடன் தகராறில் ஈடுபடக்கூடாது. சம்பந்தப்பட்ட அலுவலர்களையும், நீதிமன்றத்தையும் மட்டுமே அணுக வேண்டும்.

சட்டப்படி செயல்படுவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கோயில்களில் உள்ள சொத்துகள், நகைகள் ஆகியவை முறையாக கையாளப்படாதது குறித்த விஷயங்களை அம்பலப்படுத்துவோரின் குரல்வளையை நெரிக்கக்கூடாது” எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனுக்கு எதிரான புகாரை ரத்து செய்தது சென்னை உயர் நீதி மன்றம்

ABOUT THE AUTHOR

...view details