நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்திருந்தார்.
இதற்கு மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தே ஆக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் சூர்யா கூறிய கருத்தை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடலாம் என சந்துரு, ஹரிபரந்தாமன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கோவிட்-19 காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய பல்வேறு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், இறுதியாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பருவமழை தீவிரம் இனிமேல்தான் அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்தான் அதனைப் பரிசீலிக்காமல் மத்திய அரசின் நீட் தேர்வை 13ஆம் தேதி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் நடத்தியது; இந்தத் தேர்வுக்கு கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கரோனா காரணமாக வெளியில் சென்று முறையாக பயிற்சி எடுக்கவோ அல்லது ஆசிரியர்களிடம் நேரடியாக விவாதிக்கவோ முடியவில்லை.