சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மயானப் பாதை வசதி ஏற்படுத்தித் தருதல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றவேண்டும் எனவும், அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமும் இன்றி, உடனுக்குடன் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.