தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 19, 2020, 12:27 PM IST

ETV Bharat / state

பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு? - தீவிர ஆலோசனையில் கல்வித் துறை

சென்னை: கரோனா பரவல் காரணமாக 11,12 ஆம் வகுப்புகளின் மீதமுள்ள தேர்வுகளுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசித்துவருகிறது.

students
மாணவர்கள்

கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறுமென அறிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவிற்கும் பொதுத்தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்புகளிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்திருப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசு அனைத்து மாணவர்களுக்கான தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளதால் தமிழ்நாட்டிலும் பொதுத்தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள், கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. அது வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய தேர்வகள் நடந்துள்ளன. இன்னும் வேதியியல், உயிரியல் தேர்வுகள் நடக்க உள்ளன. 11ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுகள் வரும் 26ஆம் தேதி வரை நடக்கின்றன.

10ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 27இல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடக்க உள்ளன. 11, 12ஆம் வகுப்பு தேர்வுகள் 3 ஆயிரத்து நூறு மையங்களில், 16 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். பல லட்சம் மாணவர்கள் பங்கேறே்கும் தேர்வு மையங்களில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக எடுக்கப்படவில்லை என்றும் கிருமி நாசினி எதுவும் தெளிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்வு எழுதவரும் மாணவர்களின் பெற்றோர் வர்த்தகர்களாகவோ, வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களாகவோ இருக்கலாம் என்பதால் அவர்களின் பிள்ளைகள் மூலம் மற்ற மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தற்போது மீதமுள்ள தேர்வுகளுடன் குறிப்பாக 10ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: விடுப்பு எடுத்த மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details