சென்னை:பண மோசடி, அளவிற்கு அதிகமான சொத்து குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் அமலாக்கத்துறையால் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் நெஞ்சு வலி காரணமாக, ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், காவிரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அவர் வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை யாருக்கு பிரித்து தருவது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்து வழங்கிய கடிதத்தை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. இதனைத்தொடர்ந்து, இதற்கு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கைதாகி, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?:இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Minister V.Senthil Balaji) துறைகளை பிற அமைச்சர்களுக்கு ஒதுக்குவதை முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தது அரசியல் சட்டத்திற்குப் புறம்பான, முரணான செயலாகும் என வழக்கறிஞர் க.இளங்கோவன் ஈடிவி பாரத் உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆளுநரை பதவியிறக்கம் செய்யவேண்டி, திமுக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் (Droupadi Murmu) முறையிட்டு, மேல் நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறு கைதான அமைச்சர் - ஒரு அரசு ஊழியர் - பதவியில் நீடிக்கலாம்?:கேபினட் அமைச்சரவை முறையில் அனைத்து கேபினட் அமைச்சர்களும் தனி அதிகாரம் உள்ளவர்கள். ஒரு அமைச்சர், தனது அமைச்சரவையில் நீடிப்பதை முடிவு செய்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், ஆளுநர் அல்ல. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையும் பொறுப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் மட்டுமே உண்டு என்றார். ஆளுநருக்கு அந்த கட்டுப்பாடு இல்லை எனக்கூறிய அவர், ஆளுநருக்கு தகவல் தேவை என்றால், துறையின் செயலரிடம்தான் பெற வேண்டுமமே தவிர அமைச்சரிடம் அல்ல என்று கூறினார். மேலும், இதற்கு நீதிமன்றங்களிலும் துறை செயலர்கள்தான் பதிலிளிக்க வேண்டும் என்றார்.