தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.21-இல் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு! - சேலம் மாநாடு

DMK Youth Wing State Conclave: தொடர்ந்து 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு
திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 12:58 PM IST

Updated : Jan 6, 2024, 1:07 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் மாநில இளைஞரணி மாநாடு நடத்தப் போவதாக திமுக திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனை ஒட்டி, மாவட்டம் வாரியாக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும், வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, டிசம்பர் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.

இதையும் படிங்க:"காவல்துறையை வம்புக்கு இழுக்கிறேன்" - சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்..!

இதில் தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரு மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. இதனால், டிசம்பர் 24 அன்று நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு 2வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், வருகிற 21 அன்று சேலத்தில் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக இளைஞர் அணி தோற்றம்: 1980ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டது. பின்னர், 1982ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இளைஞரணி இரண்டாம் ஆண்டு விழாவில் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். இதன் காரணமாக, இளைஞர் அணி செயலாளர் பதவி வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

இதையும் படிங்க:பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!

Last Updated : Jan 6, 2024, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details