சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கசாலியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணி என்பது மக்களாட்சி. ஆனால் திமுக கூட்டணி ஒரு மன்னராட்சிபோல் செயல்படுகிறது. நமது கூட்டணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விவசாய குடும்பத்திலிருந்து வரலாம். திமுக கூட்டணியில் தந்தை, மகன் அவரது பிள்ளைகள் என்று குடும்பத்தினரே ஆட்சி அமைக்கிறார்கள்.
திமுக செயலாளர்கள் குறுநில மன்னர்கள்போல செயல்படுகின்றனர். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அவர்களது பிள்ளைகள், பேரன்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும். குடும்ப அரசியலுக்கு மேலும், உதாரணமாக சென்னையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாரிசு அரசியல் மூலம் வந்தவர்களே. திமுகவில் அதிகம் உழைத்த தொண்டர்கள் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். திமுகவின் நோக்கமே தங்களது குடும்ப வாரிசுகள் அரசியலில் வர வேண்டும் என்பதுதான்
திமுகவில் உழைக்கும் தொண்டர்கள் ஓரம்கட்டப்படுவர் ஸ்டாலின் தனது கட்சியின் தொண்டர்களை விரும்பவில்லை. பிகாரிலிருந்து வந்த பிரசாந்த் கிஷோரை நம்புகிறார். நாங்கள் மக்களை நம்புகிறோம். அதனால்தான் நாங்களே பரப்புரைகளை மேற்கொள்கிறோம். 70 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதலமைச்சரை கண்டிருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான். நமது வேட்பாளர் கசாலியும் விவசாயிதான். எனவே அவரை இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் " என கூறினார்.
மேலும், திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் உதயநிதிக்கும் இந்த தொகுதிக்கும் சம்மந்தமில்லை. ஆனால், இந்தத் தொகுதியில் தனது ஏராளமான உறவினர்கள் உள்ளனர்” என்றார்.