சென்னை: நீட் தேர்வு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு, மனு தர்ம எதிர்ப்பு, ஓ.பி.சி பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது. இதற்கிடையில் வரவுள்ள 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு, சின்னம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.
2021 தேர்தல்: தீவிரம் காட்டும் திமுக மகளிரணி
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை திமுக மகளிரணி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
எதிர்கட்சியான திமுக, நடப்பு நிகழ்வுகளையும், கட்சியின் நிலைப்பாட்டையும் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் விரைந்து எடுத்துச் செல்லும் பொருட்டு, சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக திமுக தொழில்நுட்ப அணி தங்களது வேகத்தை கூட்டிவருகின்றன.
இந்நிலையில், நேற்று (அக் 24) திமுக தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தும் பொருட்டு, சமூக வலைதளப் பயன்பாடு குறித்தும், மக்களிடம் திமுகவின் கருத்துகளை விரைவில் எவ்வாறு சென்றடையச் செய்வது என்பது குறித்தும் சமூக ஊடகப் பயிற்சிப் பாசறை அன்பகத்தில் பயிற்சி நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.