சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் கருணாநிதி பல்வேறு மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அரசு வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சட்டமாக்கினார்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்', 'புதுமைப் பெண் திட்டம்', 'மகளிர் சுய உதவிக் குழுக்கள்', 'மகளிரை அர்ச்சகராக்கியது' என பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029ஆம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர். அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது.