தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுகவுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம்’ - மு.க. ஸ்டாலின் - m.k.stalin

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

By

Published : May 3, 2021, 9:33 AM IST

Updated : May 3, 2021, 10:02 AM IST

தமிழ்நாடு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.02) வெளியானது. தேர்தலில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாகப் பதவியேற்கவுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று திமுகவின் வெற்றியை சமர்ப்பித்து, மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பொறுப்பை உணர்ந்து மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் எங்கள் ஆட்சி இருக்கும். கலைஞர் ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை, அவர் வழி நின்று நாங்கள் செய்வோம். அவர் இருந்த காலத்திலேயே ஆறாவது முறை திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென எண்ணியிருந்தோம். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது என்பதே எங்களுக்கு ஏக்கமாக இருக்கிறது.

வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின்

வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்கு பணி:

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம். இவர்களுக்கு வாக்களித்தது மகிழ்ச்சி தான் என உணரும் வகையிலும், இவர்களுக்குப் போய் வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்கும் எங்கள் பணி இருக்கும்.

திமுக வாக்களிக்கத் தவறியவர்களுக்குச் சேர்ந்து பணியாற்றுவோம்

எப்போது பதவிப்பிரமாணம்?

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். பத்தாண்டுக் காலத்திற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன், அவற்றையும் நிறைவேற்ற முயற்சி செய்வேன். நாளை (மே.௦3) தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டத்தைக் கூட்டி, முறையாகத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பிறகு அரசு அலுவலர்களுடன் கலந்து பேசி பதவிப்பிரமாணம் செய்யும் தேதியை முடிவு செய்வோம்.

கரோனா பரவல் காலம் என்பதால் பதவிப் பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

Last Updated : May 3, 2021, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details