தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக - விசிக கூட்டணியில் உரசல்? - காரணம் இதுதான் - dmk -vck party fight

சென்னை: முதல்வருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு, முரசொலி விவகாரத்தில் மௌனம், பாபர் மசூதி தீர்ப்பில் இஸ்லாமியர்கள் ஆதரவை பெற்ற திருமாவளவன் என தொடர்ந்து திமுகவிற்கு செக் வைக்கும் விதமாக விசிக செயல்பட்டு வருவது திமுக கூட்டணியில் உரசல் ஏற்பட வாய்ப்புள்ளதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

dmk -vck

By

Published : Nov 22, 2019, 11:20 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு இரண்டு தொகுகுதிகள் பெற்று வெற்றி பெற்றது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கும் நிலையில் திமுக - விசிக கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் சென்னையை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.

முதலமைச்சரை சந்தித்த திருமாவளவன்

இந்த சம்பவம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த காலத்தில் யாருக்கு உதவி செய்தாலும் நன்றி என்பதே இல்லை என்ற பேச்சும் அறிவாலயத்தில் ஒலிப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. அதேபோல் பாபர் மசூதி தீர்ப்பு விவகாரத்தில் திமுக சற்று நிதானமாக தன் நிலைப்பாட்டை வெளியிட்டது.

ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், "இது நியாமான தீர்ப்பு இல்லை" என்று தெரிவித்தார். மேலும், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இஸ்லாமிய அமைப்புகளால் பாபர் மசூதி தீர்ப்பை மறுவிசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய தோழர்களாக திருமாவளவன் முன்னிறுத்தப்பட்டார்.

திமுக வாக்கு வங்கியின் குறிப்பிட்ட பலமே இஸ்லாமியர்களின் வாக்குகள்தான். தற்போது இதற்கும் திருமாவளவன் மூலம் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும், கேள்வியும் திமுகவினரிடையே எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விசிக பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், "என்ஐஏ மசோதா விவகாரத்தில் திமுகவின் முடிவு ஏற்கத்தக்கதல்ல, அதனை விமர்சிக்காமல் மெளனமாகக் கடந்து செல்ல முடியாது" என்றும் பேசியிருந்தார். இந்தப் பேச்சும் விசிகவினர் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் திமுகவினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளுர் ஷாநவாஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்ஜிபி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், சோனியா காந்தி குடும்பத்திற்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவித்தார். இதனைக் கண்டிக்கும் விதமாக விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

அண்ணா அறிவாலயம்

இந்த சம்பவம் சும்மா இருந்த திமுகவை சுரண்டி பார்ப்பதுபோல் தெரிகிறதாம். எனவே, இதுபோன்று சீரியல் தொடர் போல தொடரும் நிகழ்வுகள் திமுக - விசிக கூட்டணி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதோ என்ற பதற்றம் கட்சி தொண்டர்களிடையே நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details